1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தர்ப்பணம் கொடுக்க சிறந்ததாக மகாளயபட்ச அமாவாசை கூறப்படுவது ஏன்...?

மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையிலும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.
 
மூதாதையரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென்கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.
 
பிதுர் தேவதைகள் : நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம். 1. நம் பித்ருக்கள் (மண்), 2. புரூரவர் (நீர்), 3. விசுவதேவர் (நெருப்பு), 4. அஸீருத்வர் (காற்று), 5. ஆதித்யர் (ஆகாயம்), என பஞ்சபூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது.
 
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது. எனவே, அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
 
இவர்கள் 'காருண்ய பித்ருக்கள்" என்று அழைக்கப்படுகின்றார்கள். எனவே மறைந்த நண்பர்கள், தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை நாளில் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவலாம்.
 
மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது.