ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பகல்பத்து உற்சவம்.. இன்று கோலாகல தொடக்கம்
108 திவ்ய தேசங்களில் முக்கியமான பூலோக வைகுண்டம் என புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது. அந்த வகையில் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம், அல்லது வைகுண்ட ஏகாதசி திருவிழா, சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த விழா, பகல்பத்து மற்றும் ராப்பத்து இயற்பா என 21 நாட்கள் நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று திருமொழி திருநாள் கோலாகலமாக தொடங்கியது. இதில், நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார். மஞ்சள் நிற பட்டு அணிந்த நம்பெருமாள், ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் மற்றும் திருவடியில் தண்டை அணிந்து அர்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதியம் 12 மணிவரை, அரையர்கள் நம்பெருமாளின் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர். இரவு 7.30 மணிக்கு, நம்பெருமாள் அர்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று, மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை 20 நாட்கள் தொடரும். ஒவ்வொரு நாளும், நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்யிறார்.
Edited by Mahendran