1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அனுமன் வாலின் சிறப்புக்களும் அதன் வழிபாட்டு முறைகளும் என்ன...?

சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன.


இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது.
 
இராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்த போது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம்.
 
இராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்து பேசி, இராவணின் கர்வத்தை அடக்கினார். இதன் மூலம் அனுமனின் வாலுக்குத் தனிப்பெருமை கிடைத்தது.
 
அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். இந்த வழிபாடு நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது.
 
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன்தான் அனுமனுக்கு முதன் முதலாக வால் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. பீமன் அலட்சியத்தோடு அனுமனின் வாலை அகற்ற முயற்சித்தான். ஆனால், அவனால் அந்த வாலைச் சிறிதுகூட அசைக்க முடியவில்லை. அவன் பலமுறை கடுமையாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியாமல், தவித்து நின்றான்.
 
வாயுகுமாரனின் புதல்வனான அனுமன் அப்போது அனுமனே, தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, ‘நான் சாதாரணக் குரங்கல்ல, நான் வாயுகுமாரனின் புதல்வனான அனுமன்” என்று கூறினார். அதனைக் கேட்ட பீமன், தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். பின்னர் அவன் அனுமனின் வலிமையை வியந்து பாராட்டினான்.
 
அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கிய அவன், எனக்கு அனைத்து சக்திகளையும் அளித்து வாழ்த்தியது போல், தங்கள் வாலைத் தொட்டு வணங்கி வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களையும் தந்தருள வேண்டும் என்று வரம் வேண்டினான். அனுமனும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். அதன் பிறகு, அனுமனின் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.