1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள் !!

இராமனுக்கு தம்பியாகப் பிறந்து அவன் பொருட்டு தனக்கு கிடைத்த அரசுப் பதிவியையும் துச்சமாக மதித்து துறந்த,அப்பேற்பட்ட பரதன் பிறந்த நட்சத்திரம்  “பூசம்”. 

பூசத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சகோதர/சகோதரி பாசம் மிக்கவர்களாக இருப்பார்கள். தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான்  தைப்பூசம். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.     
 
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது  எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  
 
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். 
    
சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர்,  தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள்.

பிறகு பதஞ்சலி முனிவரின்  வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து  கொண்டிருக்கிறார்.
 
தைப்பூச விரத முறை:
 
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற  சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டுச் சிவபூஜை செய்ய வேண்டும். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால்,  பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.