1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:31 IST)

திதிகளின் வரிசையில் ஆறாவதாக வரும் சஷ்டி !!

Lord Muruga
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.


அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

நதிகளில் புனிதமானது கங்கை. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில் சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம் ஆகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது.

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.