1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:14 IST)

சிவராத்திரியின் மகிமையை விளக்கும் புராணக்கதையை பார்ப்போம்...!!

சிவராத்திரி குறித்து சொல்லப்படும் பல புராணக் கதைகள், இதன் சிறப்பை விளக்குகி ன்றன. இந்தப் புண்ணிய இரவு தொடர்பான, ஒரு கதையை நாம்  காணலாம்.


வேட்டையாடுவதற்காக ஒரு முறை காட்டு க்குச் சென்ற வேடன் ஒருவனுக்கு, விலங்கு ஏதும் கிடைக்கவில்லை. பகல் முழுவதும் காடெங்கும் அலைந்து திரிந்தும் எந்தப்பயனும் ஏற்படவில்லை. இவ்வாறு இரவும் வந்து சேர்ந்தது.

பசியினாலும், களைப்பினாலும் வாடிய வேடனை, அந்த நேரம் புலி ஒன்றும் துரத்த ஆரம்பித்தது. தன் உயிருக்கு பயந்த அவன், அந்தக் கொடிய விலங்கிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இங்கும் அங்கும் ஓடினான். இறுதியில் அங்கு மரத்தின் மீது ஏறி கொண்டான். ஆனால் அவனை விடாமல் துரத்தி வந்த அந்த புலி, அந்த மரத்தின் கீழேயே வந்து சேர்ந்தது. அவனை எப்படியாவது பிடித்துத் தின்றுவிடவேண்டும் என்று, அந்த மரத்தைச் சுற்றி சுற்றி வர ஆரம்பித்தது.

மரத்தின் மீது அமர்ந்திருந்த திருடன் நடுங்கிப் போனான். மரத்தில் இருந்தால் தான் அவன் தப்பிக்க முடியும். ஆனால் அதுவோ இரவுப் பொழுது. மேலே இருந்தவாறே அறியாமல் தூங்கி விட்டால், அவன் கீழே விழுந்து விடுவான். உடனே புலிக்கும் இரையாகி விடுவான். எனவே, தூங்காமல் இருப்பதற்காக, அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, கீழே போட்டவாறே, தூங்காமல் இரவு முழுவதையும் கழித்து விட்டான்.

பொழுது விடிந்தது. புலியும் அங்கிருந்து போய் சேர்ந்தது. இவ்வாறு அவன் தப்பித்து விட்டான் ஆனால் அவனையும் அறியாமல்,அன்று இரவு அவன் பெரும் புண்ணியத்தைச் செய்து விட்டான். அன்றைய  இரவு மகா சிவராத்திரி இரவாக இருந்தது. அவன் ஏறி அமர்ந்திருந்த மரம் வில்வமாக இருந்தது. அந்த மரத்தின் கீழே ஒரு சிவலிங்கமும் இருந்தது. இவ்வாறு புனிதமான சிவராத்திரி இரவு முழுவதும் தூங்காமல் பட்டினி கிடந்து, அவருக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலைகளால், சிவ பூஜையே அவன் செய்து விட்டான்.

அறியாமல் செய்தது என்றாலும், அந்த வேடன் செய்த பூஜையால் மிகவும் மகிழ்ந்து போன சிவபெருமான், அவனது காலம் முடிந்த பொழுது, அவனுக்கு, அரிதிலும் அரிதான மோட்சம் அளித்து அருளினார்.