கம்சனை வதம் செய்வதற்காக பிறந்த கிருஷ்ணன்!!
அமாவாசை மற்றும் பெளர்ணமிக்குப் பின் வரும் பிரதமையில் இருந்து சதுர்த்தசி வரை உள்ள நாள்களை திதி என்பர். ஒருவருடைய பிறப்போ, இறப்போ இந்த திதியை மையமாக வைத்துத்தான் கணிக்கப்படுகின்றது.
இதில் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்காக ஒரு நாள் பார்த்துக் கூறவேண்டுமென ஜோதிடரிடம் சென்று கேட்டால் அஷ்டமி, நவமி இல்லாத நாளாகப் பார்த்து நாள் குறித்துக் கொடுப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் இது பற்றி தேடும்போது 8 என்ற எண் சனி கிரகத்தைக் குறிக்கிறது . சனி தாமஸ குணமுள்ளவன். 9 என்ற எண் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இவன் கடுமையான வேகம் கொண்டவன். இதனால் இந்த இரண்டு நாள்களும் தவிர்ப்பது நல்லது எனக் கூறுகிறார்கள்.
அஷ்டமியில் (8) கிருஷ்ணனும், நவமியில் (9) ராமனும் ராஜ வம்சத்தில் பிறந்தாலும் மானிடனாக பிறந்ததால் அவர்கள் பட்ட துன்பங்கள் நாம் அனைவரும் அறிவோம். கம்சனை வதம் செய்வதற்காக 8 ஆவது குழந்தையாக பிறந்த கண்ணனுக்கு ரோஹிணி நட்சத்திரம் ஆகையால், இதில் பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்றும் கூறுவார்கள். இதனால்தான் எதற்கும் 8 ஆம் எண் வந்தால் அதனை விலக்க வேண்டுமென பொதுமக்களில் சிலரும்; எண் கணித வித்தகர்களும் கூறுகிறார்கள்.
தேவகி மகனாய் பிறந்து ஓரிரவில் யசோதை மகனாய் வளர்ந்தவனான அச்சுதன், அனந்தன், கோவிந்தன், மாதவன், மதுசூதனன், துவரகாபுரீசன் என பல பெயர்களால் போற்றப்படும் கள்வன் மாயக் கண்ணன் பிறந்த திதி அஷ்டமி, நட்ஷத்திரம் ரோஹிணி. இந்த அஷ்டமி நாளை கிருஷ்ண ஜெயந்தியென கொண்டாடுகிறார்கள்.
இதனை வட மாநிலங்களில் வெகு விமரிசையாக 3 நாள்கள் கொண்டாடுகிறார்கள். தென்னாட்டில் அந்த நன்னாளில், வீட்டிலிருக்கும் குழந்தையின் காலை இழை கோலத்து மாவில் பதியவிட்டு அடியடியாக தோய்த்து, வாசலிலிருந்து பூஜைக்கோயில் வரையிலும், பாலகிருஷ்ணன் நம் வீட்டிற்குள் அடியெடுத்து உள்ளே வருவதாக கோலம் போடுவர்.
கண்ணனுக்கு பிடித்த முறுக்கு, சீடை, வெல்ல உருண்டை, தட்டை, அதிரசம் போன்றவைகளை முன்னமே செய்து, அன்றைய தினம் வடை பாயசத்துடன் சாப்பாடு செய்து, பழம் பாக்கு வெற்றியையுடன் முக்கியமாக, வெண்ணெயும் வைத்து பூஜை செய்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உண்டு மகிழ்வார்கள்.