ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்கும் ஆலயம் எது தெரியுமா...?

அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி  திருக்கோயில்களே. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

புண்ணிய பூமியான ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம். ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப  சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான்.
 
அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை  காட்சியளிப்பாள்.
 
மூவகை வடிவங்களாவன:
1). காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்), 2). அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்), 3). காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்).
 
காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு. காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில்,  அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை.
 
அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறையினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக்கின்றது. அதனால், இத்திருத்தலம் ஸ்ரீ  சக்கரபீடத் தலம் என அழைக்கப்படுகின்றது. அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகின்றாள். 
 
வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கரபீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.