கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான். கடைசி நேரத்தில் விளக்குகள் வாங்காமல் முன்கூட்டியே விளக்குகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.
வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடம் வருடம் ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும். பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும். நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.
புதிய அகல் விளக்கு : புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்துவிடாமல் இருக்கும்.
4 மணி நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியதை மின் விசிறி இருக்கும் இடத்திலோ அல்லது வெயில் படும் இடத்திலோ காய வைத்து எடுக்க வேண்டும்.
காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.