ஆவணி வெள்ளிக் கிழமையில், ராகுகால வேளையில், துர்கையின் சந்நிதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதால் நம் துன்பங்கள் எல்லாம் தீரும்.
துக்கங்களையெல்லாம் போக்கக்கூடியவள் துர்காதேவி. சக்தியின் பல வடிவங்களில் துர்கையும் ஒருத்தி. அதனால்தான், துர்காதேவி எல்லாக் கோயில்களிலும் வீற்றிருக்கிறாள். சக்தியில்லையேல் சிவமில்லை என்றொரு வாசகம் உண்டு. அதனால்தான் சிவாலயங்களில், கோஷ்டத்திலேயே சிவனாரைச் சுற்றியுள்ள கோஷ்டப் பகுதியிலேயே கொலுவிருந்து அருள்பாலிக்கிறாள் தேவி.
ராகுகாலத்தில், துர்கையின் ஆட்சியே பலம் பெறுகிறது. ராகு என்பது சாயா கிரகம். பாம்பு கிரகம். ராகு கேதுவின் தாக்கம், சனியின் தாக்கத்தை விட, குருவின் பெயர்ச்சியை விட மிக மிக முக்கியமானது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதிதான் ராகு - கேது பெயர்ச்சி நடைபெற்றது.
ராகு - கேது பெயர்ச்சியால், செல்வாக்கும் சொல்வாக்கும் இழந்துவிடுமோ என்று அச்சப்பட்டிருப்பவர்கள், ராகு தோஷத்தாலும் கேதுவின் ஆதிக்கத்தாலும் பீடிக்கப்பட்டிருப்பவர்கள், ராகுகால வேளையில், துர்கையை சரணடைந்தால் போதும். நம்மை ராகு கேது முதலான தோஷங்களில் இருந்து காத்தருள்வாள் என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள்.
ஒவ்வொரு நாளும் ராகுகாலம் ஒன்றரை மணி நேரம் வரும் என்றாலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் வரும் ராகுகாலம் மிகவும் முக்கியமானது. செவ்வாய்க் கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30. வெள்ளிக்கிழமை ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எனவே, வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று, அம்மனை வழிபடுங்கள். சிவாலயங்களுக்குச் சென்று அம்பாளைத் தரிசியுங்கள். கோஷ்டத்தில் துர்கையின் சந்நிதியில், எலுமிச்சை தீபமேற்றுவது நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
துர்கை அம்மன், எலுமிச்சை தீபம், வழிபாடு, பலன்கள், ஆன்மீகம், Goddess Durga, lemon lamp, worship, benefits, Spirituality
Benefits of worshiping Goddess Durga by lighting a lemon lamp !!