வித்தியாசமாக யோசிப்பவர்களே! இந்த மாதம் முழுக்க புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்வீடு, பக்கத்து வீடுக்காரர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
சூரியனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனச் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாண முயற்சியில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தப்பாருங்கள். கேது லாப வீட்டிலேயே தொடர்வதால் மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். பணபலம் உயரும். எதிர்பார்த்திருந்த தொகையும் கைக்கு வரும். பதவிகள் தேடி வரும்.
உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் பகவான் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க நீங்கள் கம்பீரமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். கோவிலுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். ஆனால் செவ்வாய் 8-ல் நிற்கும் சனியுடன் சேர்ந்திருப்பதால் கால் மற்றும் கழுத்து வலி வரும். தூக்கம் குறையும். சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள்.
5-ம் வீட்டில் ராகு நிற்பதால் மகன் கோபப்படுவார். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 2-ஆம் தேதி முதல் குரு ராசிக்கு 6-ல் மறைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். மறைமுக எதிர்ப்புகள், அவமானங்கள் வரக்கூடும். வழக்கு விவகாரங்களில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என பார்ப்பது நல்லது. சிலர் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வரக்கூடும். 26-ஆம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் தொண்டைப் புகைச்சல், கணவன்-மனைவிக்குள் சச்சரவு, வீண் சந்தேகம், வாகனப் பழுது வந்து நீங்கும்.
கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வரும். காதல் விஷயத்தை தள்ளி வையுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். சந்தை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். மூத்த அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டிய மாதமிது.