20 லட்சம் மற்றும் 50 பவுன் நகையை வாங்கியதுடன் மேலும் 7அரை கோடி பணம் கொடுத்தால்தான் வாழமுடியும்- கணவன் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையரிடம் மனைவி புகார்
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தேவ்குமார் மிஸ்ராவிடம் இருந்து அனுபமா விவாகரத்து பெற்றார்.
தேவ்குமார் மிஸ்ரா வரதட்சணையாக அனுபமாவிடம் இருந்து வாங்கி இருந்த நகைகளை விற்று கோவை வடவள்ளி பகுதியில் வாங்கி இருந்த இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுபமா பெற முயற்சி செய்தார்.
அந்த நேரத்தில் கோவை ரேஸ்கோர்ஸை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தான் வக்கீல் என்றும் இது போன்ற பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து முடித்து தருவதாகவும் கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அனுபமாவும் வக்கீல் செந்தில்குமாரும் பழகி வந்தனர்.அப்போது செந்தில் குமார் அனுபமாவை காதலிப்பதாகவும் தன்னுடைய மனைவி கார்த்திகேயனியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருவதால் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு செந்தில்குமாரும் அனுபமாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அனுபமா பெயரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துக்களை தனக்கு தர வேண்டும் என செந்தில் குமார் கேட்டுள்ளார். அனுபமா தர மறுக்கவே அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
பின்னர் சில நாட்கள் கழித்து அனுபமாவை சமாதானப்படுத்தி கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு செந்தில்குமாரின் அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்து அனுபமா தனது கணவர் செந்தில்குமார் இடம் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுபமா தனது கணவர் செந்தில் குமார் குறித்து விசாரிக்க தொடங்கினார்.
அப்போது 2022 ஆம் ஆண்டு தான் செந்தில்குமார் மதுரை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற விபரம் தெரியவந்தது. ஏற்கனவே விவாகரத்து ஆனதாக கூறி தன்னை திருமணம் செய்து மோசடி செய்ததாக அனுபமா வக்கீல் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் சில நாட்கள் கழித்து வக்கீல் செந்தில்குமார் ஏழரை கோடி பணம் தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் என கூறியிருக்கிறார்.இதனை அடுத்து தனது மனைவி அனுபமாவை அங்கு இருந்து துரத்திவிட்டு உள்ளார்.பின்னர் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
கடந்த நவம்பர் மாதம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அனுபமா கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்து உள்ளார்.
மேலும் வக்கீல் செந்தில் தன்னிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் புகாரில் அனுபமா கூறியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.