மார்ச் 22 வரை தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் மார்ச் 22ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கூட மிதமான மழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், தமிழகத்தில் சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 22ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. மார்ச் 25ஆம் தேதி வரை வெப்பநிலை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டாலும், மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் இன்று வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, ஒரு பக்கம் சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றாலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதே வானிலை ஆய்வு அறிக்கை கூறும் தகவல் ஆகும்.
Edited by Siva