வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2025 (16:22 IST)

அரசு பள்ளி சுவர் இடிந்ததால் பரபரப்பு.. மூன்று மாணவர்கள் படுகாயம்..!

புதுச்சேரியில் அரசு பள்ளி சுவர் இடிந்ததால் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆறு வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் உள்ளது. இந்த பள்ளியில் குறைந்த அளவு மாணவ மாணவிகள் மட்டுமே தற்போது கல்வி பயில்கிறார்கள்.

35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்து உள்ளது. இதனால், இந்த பள்ளியை சீரமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை 9 மணிக்கு பள்ளி மாணவர்கள் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதனால், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதாகவும், இது குறித்து கல்வித்துறை வட்ட ஆய்வாளர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Siva