1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (16:39 IST)

கணக்கில் காட்டாத ரூ.300 கோடி; ரூ77 கோடி பறிமுதல்: தொடரும் ஐடி ரெய்ட்!

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி மறைக்கப்பட்டது கண்டுபிடிப்பு. 
IT Raid
 
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். 
 
ஒரே இரவில் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பனையூர் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. 18 மணி நேரமாக பனையூர் வீட்டில் இன்னமும் நீடிக்கும் இந்த விசாரணையில் விஜய்யின் வங்கி கணக்குகள், அவரின் சம்பளம் குறித்த விவரங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
பிகில் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளனர். ஆனால், உண்மையில் அவரது சம்பளம் ரூ.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், விஜய்யிடம் இது குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், பிகில் படத் தயாரிப்புக்கு நிதி அளித்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.77 கோடியை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை. மேலும், அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள 38 இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி மறைக்கப்பட்டது கண்டுபிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.