ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்துக்கு கொரோனா! – பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வாரா?
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களில் முக்கியமானவர் வைத்திலிங்கம். சில நாட்கள் முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரும் கலந்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில் அடுத்து நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை. எனினும் பொதுக்குழு கூட்டத்திற்கு பிந்தைய சில நாட்களில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.