செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:02 IST)

சென்னையில் இருந்து தமிழகம் முழுக்க நோய் பரவல்? அரசு செய்ய போவது என்ன? - டிடிவி!

தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என டிடிவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவையும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனிடையே பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என டிடிவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இது குறித்து மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர்  சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால்,  தலைநகரில் நோய் தடுப்பு  நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும். 
 
அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும்  கவனமாக கையாள வேண்டும்.
 
சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம்.