திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (12:16 IST)

ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி! - மூவர் கைது!

Pothanur Railway station
கோவை அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வட மாநில தொழிலாளர்கள் மூன்று பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.


 
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கேஸ் (21), ஜூஹல் (19), பப்லு (31). இவர்கள் மூவரும் மதுக்கரை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மூவரும் சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து மூவருக்கு அபராதம் விதித்தனர்.

இதையடுத்து மூவரும் அங்கிருந்து சென்ற நிலையில், அபராதம் விதித்ததில் ஆத்திரமடைந்த மூவரும் மீண்டும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மீண்டும் சிட்கோ அருகே உள்ள தண்டவாளத்திற்கு வந்து, அங்கிருந்த மைல்கல், இரும்பு ஆகியவற்றை எடுத்து ரயில்வே தண்டவாளத்தில் வைத்து விட்டு மறைந்து நின்றனர்.

ஆனால் ரயில்வே அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் சென்றது. அப்போது அந்த ரயிலை இயக்கிய லோகோ பைலெட் ரயில்வே தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்பு இருப்பதை போத்தனூர் ரயில்வே துறையினருக்கு தெரிவித்தனர்.

 
இதையடுத்து விரைந்து வந்த தண்டவாள பராமரிப்பு குழுவினர் தண்டவாளத்தில் இருந்த கற்கள், இரும்பு துண்டுகளை அப்புறபடுத்திச் சென்றனர். இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவ்வழியாக வந்த டி கார்டன் விரைவு ரயில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதே தண்டவாளத்தின் மற்றொரு இடத்தில் வைத்திருந்த கற்கள் மீது மங்களூர் - சென்னை விரைவில் ஏறிச் சென்றது. பின்னர் அதில் வந்த லோகோ பைலெட் கூறிய தகவல் அடிப்படையில் உடனடியாக ரயில்வே தண்டவாள பாதுகாப்பு குழுவினர் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அருகே சோதனை செய்த போது போலீசாரை பார்த்து தப்பிய மூவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் மூவரும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அபராதம் விதித்த ஆத்திரத்தில் ரயிலை கவிழ்க்க திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.