புளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
உயிருக்கு உலை வைக்கும் புளுவேல் விளையாட்டை மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
புளூவேல் விளையாட்டை விளையாடி தனது உயிரை இளைஞர்கள் பலர் மாய்த்துக்கொள்ளும் சம்பவம் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு இந்தியாவில் பரவி, தமிழ் நாட்டிலும் பரவியுள்ளது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் மதுரையில் ஒரு இளைஞர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், பாண்டிச்சேரியில் ஒரு பெண் வங்கி ஊழியரை போலீசார் சமீபத்தில் மீட்டனர். அதேபோல், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்த விளையாட்டை ஆடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற போது போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், புளுவேல் விளையாட்டை நேரிடையாகவோ, இணையத்தின் மூலமாகவே மற்றவர்களுக்கு பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விளையாட்ட 12 முதல் 19 வயது வரையிலான இளைஞர்கள்தான் அதிகமாக விளையாடுகிறார்கள். புளுவேல் கேம் விளையாடும் சிறார்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். தூங்கும் போதும், சாப்பிடும் போதும் அவர்களிடம் வித்தியாசம் தெரியும். எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறார்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தேவைப்படும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்படும். அதேபோல், உண்மைக்கு மாறான புளுவேல் பற்றிய செய்திகளை மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பரப்பினாலும் சட்டபடி தண்டனை அளிக்கப்படும். ஏனெனில், மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் குற்றம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.