வெள்ளி, 7 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மார்ச் 2025 (17:43 IST)

வரி செலுத்துவோரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் அரசு?! - புதிய சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

Selvaperundhagai

மத்திய அரசு செயல்படுத்த உள்ள புதிய வருமானவரி சட்டம், வரி செலுத்துவோரின் அந்தரங்கங்களை பாஸ்வேர்டு இல்லாமலே சென்று பார்ப்பதற்கு வழிவகை செய்வதாக தமிழக காங்கிரஸ் காரியக் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமாக பதிவிட்டுள்ள அவர் “புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

 

வங்கி, முதலீட்டு கணக்குகள், கம்ப்யூட்டர்களில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

 

மக்களின் சமூக வலைதள கணக்குகள், இமெயில்களில் அவர்களின் பல அந்தரங்கமான விஷயங்கள், வருமான வரி அதிகாரிகளுக்கு தேவையில்லாத பல தகவல்கள் இருக்கும். மேலும், சிலர் தொழில் ரகசியம், தொழில் யுக்திகள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்கள், இமெயில்கள் வைத்திருப்பார்கள். அவை அனைத்திலும், வருமானவரி அதிகாரிகள், அவர்களது அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்து தகவல்களை சேகரிக்கும் வாய்ப்புள்ளது.

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1) (ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே, தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றியுள்ளது பா.ஜ.க.அரசு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கு ஆளும் ஒன்றிய அரசு இதுபோன்று அதிகாரத்தை அளித்துள்ளதோ என சந்தேகமாகவுள்ளது. தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இந்த மாற்றங்களை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டு, புதிய வருமான வரிச் சட்டம் 2025 சட்டத்தை அமல்படுத்தவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K