செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 டிசம்பர் 2020 (09:11 IST)

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி க்ளினிக்! – முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்!

தமிழகம் முழுவதும் கிராமம் மற்றும் தூர பகுதிகளில் அம்மா மினி க்ளினிக்குகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

தமிழகம்தோறும் மாவட்டத்திற்கென தலைமை மருத்துவமனை, ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவை மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன. எனினும் தூரமான கிராமப்பகுதிகள், மருத்துவமனையிலிருந்து தொலைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அம்மா மினி க்ளினிக் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இத்திட்டத்தை இன்று சென்னையில் உள்ள வியாசர்பாடி, ராயபுரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று முதல்வர் திறந்து வைக்க உள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த மினி க்ளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர்.

இந்த க்ளினிக்குகளில் சளி, காய்ச்சல், உடல்வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மாதாந்திர மருந்துகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து 7 மணி வரையிலும் இந்த மினி க்ளினிக் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.