வேலை செய்யும் பெண் ஊழியர்களை பட்டதாரியாக்கிய திருப்பூர் நிறுவனம்.. குவியும் வாழ்த்துக்கள்..
திருப்பூர் ஜவுளி நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் பள்ளி படிப்பு முடித்த பெண் ஊழியர்களை தொலைதூர கல்வி மூலம் பட்டதாரி ஆக்கி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அந்த நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு வறுமை உள்பட பல்வேறு சூழ்நிலை காரணமாக தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் 1315 பெண் தொழிலாளர்களை நிறுவனத்தின் நிர்வாகம் உயர்கல்வி படிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பூரில் உள்ள கேபிஆர் என்ற ஜவுளி நிறுவனம் தமிழ், ஹிந்தி, ஒடியா ஆகிய மொழி பிரிவுகளில் தொலைதூர கல்வி மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை தற்போது பட்டதாரி ஆக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டு மட்டும் 1315 பெண் தொழிலாளர்கள் பட்டதாரி ஆகி உள்ளதாகவும் இதுவரை மொத்தம் 41000 தொழிலாளர்களை இந்நிறுவனம் பட்டதாரியாக மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது
தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் காலமெல்லாம் தங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்யக்கூடாது என்றும் இதைவிட நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அவர்களை பட்டதாரி ஆக்கி உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதை அடுத்து இந்த நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Edited by Mahendran