சசிகலாவை நீங்கள் சென்று சந்திப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவசியம் இருப்பதாக தெரியவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவிய நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே தன்னை உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சசிகலாவிற்கு எதிரான புகாரை தெரிவித்தார். மேலும், தன் அத்தை சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.
நேற்றும் அதிமுக தொண்டர்கள் தீபாவை காண அவரது இல்லத்திற்கு வந்திருந்தனர். மாலை 5 மணி அளவில் வீட்டின் மாடிக்கு வந்த தீபா தொண்டர்களை நோக்கி, ‘இரட்டை இலை’யை குறிக்கும் வகையில் இரட்டை விரலை காட்டினார்.
பின்னர், தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா, “அனைவரது விருப்பத்தை ஏற்று சிறிது நேரம் உரையாற்றுகிறேன். மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயலலிதாவை இழந்து மீளா துயரத்தில் நாம் இருக்கிறோம். சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் பொறுமை காப்பது அவசியம். எம்.ஜி.ஆர். நூற்றாண்டை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
ஜெயலலிதாவின் தியாகத்துக்கு ஒப்பே கிடையாது. அவரது பெயர், புகழ் என்றும் நிலைத்திருக்கும். உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன். உங்களுக்காக நான் விரைவில் பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, புதிய கட்சியை எப்போது தொடங்க இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தீபா, ’புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளேன். மிக விரைவில் தீர்க்கமான முடிவு எடுத்து அறிவிப்பேன்’ என்றார்.
மேலும், சசிகலாவை எதிர்த்து போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் சசிகலாவை சென்று சந்திப்பதற்கான அவசியம் இருப்பதாக தெரியவில்லை என்றும் பதிலளித்தார்.