ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (23:34 IST)

விதிகளை மீறி கல்குவாரிகள் இயங்கி வருகிறது - முகிலன்

இந்திய அரசு சட்டப்படியும், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிகளை மீறி கரூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும், அனுமதி இல்லாமல் குவாரிகள் இயங்குவது தமிழகத்திலேயே கரூரில் தான் உள்ளது  என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அதிரடி பேட்டி
 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட 7 தாலுக்காக்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாய பிரச்சினைகளை முறையிட்டனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அனுமதியில்லாத குவாரிகளால் விவசாயத்திற்கு பாதிப்பு என்றும், கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், துக்காச்சி கிராமத்தில் அனுமதியில்லாமல், ஒரு குவாரி இயங்குவதாகவும், இந்த குவாரியினால் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கு பாதிப்பு ஏற்படும், ஆகவே, ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். மேலும், சமூக ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தார். உடனே குறுக்கிட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், இது விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆகவே, சம்பந்தப்பட்ட துறை ரீதியான மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தால், அனைத்து விதமான மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 3 நிமிடம் தான் கணக்கு என்றும் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர் என்றும் ஆகவே துறைரீதியான பிரச்சினையை பேசினால் விவசாயிகளுக்கும் நல்ல பயன் கிட்டும் என்றார். பின்னர் அரசின் ஆன்லைன் முறைப்படி நேரடி நெல் கொள்முதல் விண்ணப்பம் முறையினை டெமோ செய்து காட்டப்பட்டதோடு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கூட்ட முடிவில் விவசாய பெருமக்களிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை வாங்கி விட்டு சென்றார். 
 
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த, சமூக ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தோழர் முகிலன் கூறும், போது., கடந்த வாரத்தில் கரூர் மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை அலுவலகத்தினை ஆய்வு செய்து பெற்ற ஆவணத்தினை கருத்தில் கொண்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் நிராகரிக்கப்பட்ட, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை இல்லாமல், இயங்கி வரும் தனியார் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், விதிகளை மீறி, குவாரிக்கு அனுமதி கொடுத்துள்ளது மிகப்பெரிய தவறு என்றும், ஆகவே இந்த அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், காருடையாம்பாளையம் பொன் விநாயாகா புளூ மெட்டல் என்கின்ற தனியார் கல்குவாரிக்கு நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சட்டப்படியும், தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிப்படியும், மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி தான் அனுமதி பெற வேண்டும், ஆனால், ஏடி மைன்ஸ் நிர்வாகமே அனுமதி தந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆகவே, கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், போர்க்கால அடிப்படையில் அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். ஆனால் இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், இது விவசாய பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார். இது விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சினை, ஆகவே கரூர் மாவட்ட ஆட்சியர் இது போன்ற வார்த்தைகளை தவிர்த்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.