1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:10 IST)

முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக-வின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், முதல்வர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க, உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா ஆணை பிறப்பித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் ரூ. 4,800 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுகவின் ஆர்,எஸ். பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இது குறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்தது. அதில் முதல்வர் மீதான புகாரில் எந்த  முகாந்திரமும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையிலேயே தெரியவந்துள்ளதால், இது குறித்து மேலும் விசாரிக்க வேண்டியதில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் நெடுஞ்சாலைத்துறையும், லஞ்ச  ஒழிப்புத்துறையும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது என நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு என திமுகா-வின்  ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு வாரத்தில் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.