1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (11:36 IST)

தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டி கொன்ற மது போதை நபரால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கரையூரை சேர்ந்தவர்  ஈஸ்வரன் (45), இவருக்கு திருமணம் ஆகி நதியா என்ற மகள் உள்ளார்.


 
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மகள் நதியாவை அரிவாளால் வெட்டியதில், படுகாயம் அடைந்த நதியா ஓடியதில் வீட்டின் முன் உள்ள சாலையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

மேலும் வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த அவரது தாய் செல்லத்தாயையும் (75) வெட்டியதில் சம்பவ இடத்திலேயே செல்லத்தாய் பலியானார்.

தொடர்ந்து வீதியில் அரிவாலுடன் மது போதையில் சுற்றித்திரிந்தவர்  அப்பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  பெரியனாண்டி அம்பலம் (75)  என்ற முதியவரை வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த 2 மாடுகளை வெட்டி உள்ளார்.

இதையடுத்து மாடுகள் அலறி துடிக்கும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஈஸ்வரனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நத்தம் போலீசார் செல்லதாய், பெரியனாண்டி அம்பலம் ஆகியோரது உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மகள் நதியாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த நதியா கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மது போதையில் மகள் மற்றும் தாய் பக்கத்து வீட்டுக்காரர் என மூன்று பேரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.