புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 2 ஏப்ரல் 2020 (17:04 IST)

கோடி மேல் கோடியாக கேட்கும் எடப்பாடியார்! தருவாரா மோடி?

கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 9 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில் மேலும் 3 ஆயிரம் கோடி கேட்டுள்ளார் தமிழக முதல்வர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை இழந்து வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் தொழில்துறை பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க மாநில அரசுகள் மத்திய அரசிடம் நிதி வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றன.

தமிழக அரசும் மக்களுக்கு மாத நிவாரணம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசியம் 9 ஆயிரம் கோடி கோரியுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மத்திய அரசு முதற்கட்டமாக 15 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று கொரோனா அபாயம் அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸில் கலந்தாலோசித்தார். அப்போது முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் 3 ஆயிரம் கோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆக மொத்தம் 12 ஆயிரம் கோடி தமிழகம் கோரியுள்ள நிலையில் மத்திய அரசின் முதற்கட்ட 15 ஆயிரம் கோடி போதாது என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிகமான தொகை ஒதுக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாக பலர் கருத்து கூறி வரும் நிலையில், தமிழகம் கோரியுள்ள இந்த தொகை முழுவதுமாக மத்திய அரசிடமிருந்து பெறுவது கடினம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி அளிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவைக்கும் குறைவான அளவிலேயே நிதி கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.