செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: புதன், 22 நவம்பர் 2023 (14:19 IST)

7 தமிழக மாணவர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்!

அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தின் சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயின்ற 7 தமிழக மாணவர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்.


அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தை சேர்ந்த புகழ்பெற்ற நிபுணரான சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களில் 12 வயது ஜெய்ஸ்ரீ அக்ஷயா மற்றும் 14 வயது ஆர்யன் சதீஷ் புதிய சாதனையை படைத்துள்ளனர். டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜே கே எஃப் டான் கிரேடிங் தேர்வுகளில் நமது நாட்டைப் ரதிநிதித்துவப்படுத்தி,கராத்தேவில் மிக உயர்ந்த அங்கீகாரமான பிளாக் பெல்ட்களை இவர்கள் வென்றுள்ளனர்.

ஜே கே எஃப் என அழைக்கப்படும் ஜப்பான் கராத்தே கூட்டமைப்பின் சர்வதேச நிபுணர்களால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மரியாதைக்குரிய கராத்தே அமைப்பாக இது போற்றப்படுகிறது. வெறும் 12 வயதே ஆன ஜே ஜெய்ஸ்ரீ அக்ஷயா, டான் 1 ஜூனியர் பிரிவில் இந்தியாவின்  இளைய ஜே கே எஃப் பிளாக் பெல்ட் வீராங்கனையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதே பிரிவின் கீழ் கிரிஷிவா ஏடிஎம் என்ற மாணவரும் பிளாக் பெல்ட்டை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டான் 1 சீனியர் பிரிவில், கிஷோர் எம் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். டான் 2 ஜூனியர் பிரிவில் ஆர்யன் சதீஷ் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். இப்போது 14 வயதாகும் இவர், ஒன்பது வயதில் இந்தியாவின் இளைய ஜே கே எஃப் பிளாக் பெல்ட் வீரர் பட்டத்தை வென்று சாதனை படைத்தவராவார்.

மேலும், டான் 2 சீனியர் பிரிவில் ராகுல் அவதானி, ஹரிரோஷன் ஜே பி மற்றும் சுரேந்தர் கே ஆகியோர் பிளாக் பெல்ட்களை வென்றுள்ளனர். கராத்தே துறையில் அறிமுகமே தேவைப்படாத சென்செய் டொனால்ட் டைசனால் மேற்கூறப்பட்ட அனைவரும் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜே கே எஃப் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் உரிமம் பெற்ற முதல் இந்தியர் இவர். தனது தந்தை மற்றும் புகழ்பெற்ற கராத்தே குருவான ஸ்டான்லி குருஸின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் மூன்று வயதிலிருந்தே கராத்தே கற்கத் தொடங்கியவர் சென்செய் டைசன் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

சென்செய் டைசனின் தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஜே கே எஃப் வாடோ-காய் கராத்தேவின் தலைவர் சென்செய் கொய்ச்சி ஷிமுரா அவருக்கு ஆசிரியரானார். கடந்த ஆண்டு இந்திய-ஜப்பான் கருத்தரங்கு நடந்தபோது, சென்செய் கொய்ச்சி ஷிமுரா, இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க சென்னை மற்றும் மேற்கு வங்காளத்துக்கு வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தனது மாணவர்கள் பிளாக் பெல்ட் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உலகின் இளைய ஐந்தாவது டான் ஜே கே எஃப் பிளாக் பெல்ட் வீரரான சென்செய் டைசன், "ஒரு மாணவர் முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட்டை அடைய ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாக் பெல்ட் எங்கிருந்து ஒருவர் பெறுகிறார் என்பது மிகவும் முக்கியம்.

எனது அனைத்து மாணவர்களும் ஜேகேஎஃப் அமைப்பிடமிருந்து பிளாக் பெல்ட்களைப் பெற்றதில்  நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், "2023 பேட்ச்சின் வெற்றியின் மூலம், அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியாவின் 16 மாணவர்கள் ஜே கே எஃப் சான்றளிக்கப்பட்ட பிளாக் பெல்ட்களை பெருமையுடன் பெற்றுள்ளனர்.

இந்தியாவிலேயே இது அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை 100 மற்றும் 1000ஐ எட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், நாங்கள் கராத்தே மட்டுமல்ல, வாழ்க்கைத் திறன்களையும் கற்றுத் தருகிறோம்," என்றார்.

சென்செய் டைசன் மேலும் கூறுகையில், "எங்கள் அடுத்த இலக்கு டோக்கியோவில் நடைபெற உள்ள 2025 உலகக் கோப்பையில்  இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடமான நிப்பான் புடோகன் ஸ்டேடியத்தில் இது நடைபெறுகிறது. அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றன," என்றார்.

ஜே கே எஃப் வாடோ-காய் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கராத்தே அமைப்பாகும், இது ஜப்பானுக்குள் 1,350 கிளைகளையும் ஜப்பானுக்கு வெளியே 250 குழுக்களையும் கொண்டுள்ளது (பதிவு செய்யப்பட்ட கிளைகள் உட்பட). 850,000 உறுப்பினர்களில், சுமார் 180,000 பேர் பிளாக் பெல்ட் தரவரிசையில் உள்ளனர்.

உலகின் மிகவும் பிரபலமான தற்காப்பு கலையான கராத்தே ஜப்பானில் தனது பயணத்தைத் தொடங்கியது, இப்போது சுமார் 150 நாடுகளில் 130 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Edited By: Sugapriya Prakash