செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 27 மே 2024 (12:30 IST)

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

Farmer Protest
சிலந்தி ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டி வரும் கேரளா அரசு கண்டித்து லோயர் கேம்ப், குமுளி சாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கேரளா அரசு, தற்போது சிலந்தி ஆற்றைத் தடுத்து தடுப்பணை கட்டி வருகின்றது.  இதனால் அமராவதி அணையின் நீர் வரத்து கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் இரண்டு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடும் விவசாய நிலங்கள் மற்றும் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் நிலங்களும் பயன் பெற்று வருகிறது. கேரளா அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கே தண்ணீர் கிடைக்காது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  
 
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக – கேரளா எல்லை பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குமுளி நோக்கி சென்ற தமிழக விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.


கேரளா அரசு உடனடியாக சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டி வரும் தடுப்பணையை நிறுத்த வேண்டும் என்றும் கேரளா அரசு மேற்கொண்டு எந்தவித தடுப்பணைகளும் கட்டாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.