சுவாதி கொலையாளி ராம்குமார் இப்படி தான் சிக்கினான்
தமிழகத்தையே அதிர வைத்த சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ராம்குமாரை நெல்லையில் காவல் துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர்.
கடந்த 24-ஆம் தேதி சுவாதியை கொலை செய்த கொலையாளி அவரது செல்போனை எடுத்து சென்று விட்டார். அவரது செல்போன் கொலை நடந்த 2 மணி நேரத்திற்கு சூளைமேடு பகுதியிலேயே இருந்துள்ளது. அதன் பின்னரே அந்த செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று குற்றாவாளியின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றவாளி A.S.மேன்சனில் தங்கியிருந்த தகவல் காவல் துறைக்கு கிடைத்தது.
மேன்சன் நிர்வாகியிடம் இருந்து குற்றவாளி ராம்குமார் பற்றிய தகவலை சேகரித்த காவல் துறை நேற்று காலை நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரம் விரைந்தனர். காலை முதலே ராம்குமாரை நோட்டமிட்டு வந்த காவல் துறை, இரவில் அனைவரும் தூங்கிய பிறகு ராம்குமாரை கைது செய்யலாம் என திட்டமிட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் ராம்குமார் அவரது வீட்டில் காவல் துறையால் சுற்று வளைக்கப்பட்டார். காவல் துறை கைது செய்யப்போவதை அறிந்த ராம்குமார் பிளேடால் அவரது கழுத்தை அறுத்துக்கொண்டார்.
உடனடியாக அவரை கைது செய்த காவல் துறை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதல்கட்ட மருத்துவ உதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.