ஸ்டாலின் பேச்சு நாகரிகமற்றது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் அதிமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டிவிட்டு, இப்படிப்பட்ட ஒரு அரசுக்கு விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்டாலின் பேசியது நாகரிகமற்றது என தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரண்டு அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் விருது குறித்து ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த டிசம்பர் மாதத்திலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது முகநூலில் ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்ததாகவும் அவதூறு வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட டென்னிஸ் செயற்கை இலை மைதானத்தை தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், மேடையில் அடிக்க வேண்டும் உதைக்க வேண்டும் என பேசிய ஸ்டாலின் பேச்சு நாகரிகமற்றது என தெரிவித்தார்.