வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (14:07 IST)

கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா? - ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரவேண்டிய வாடகை பாக்கியை தமிழக அரசு முறைகேடாக குறைக்க முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள 17 ஏக்கர் நிலம் தமிழக அரசுக்கு சொந்தமானது. இதற்கான குத்தகைக் காலம் 1995 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. இந்நிலையில் புதிய ஒப்பந்தத்தின் படி 1995 க்குப் பிறகு முதல் ஐந்து வருடத்துக்கு ஆண்டுக்கு 50,000 குத்தகை தொகையாகவும், அதன் பிறகு அன்றைய சந்தை மதிப்பில் குத்தகை தொகை வழங்குவது மாற்றியமைக்கப்படும் எனவும் ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நிலையின் படி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழக அரசுக்கு கட்டவேண்டிய வாடகைப்பாக்கி 2081 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் இதை கட்டமறுத்து வருகிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். இதனால் தமிழக அரசு இந்த வாடகை பாக்கியை முறைகேடாக 250 கோடியாக குறைக்க முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அவர் தனது டிவிட்டரில் ‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி!. அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும்.’ எனவும் ‘மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியைக் குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக? 'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா?” எனவும் அதிமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.