1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2024 (07:36 IST)

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதி அறிவிப்பு..!

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளதை அடுத்து, தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாட்டில் நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த நிலையில், அந்த தேர்தலில்  அநுர குமார திசநாயக வெற்றி பெற்று, நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தல் மூலம் ஆட்சி அமைக்க விரும்புவதாக கூறிய புதிய அதிபர்  அநுர குமார திசநாயக, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்த நிலையில், இன்னும் 11 மாத காலம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருந்தாலும், முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva