ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (20:38 IST)

சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள்

karur
கரூரில் சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம் குமார கவுண்டன்புதூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜீவ சமாதியில் நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு சித்தர் பாலசுப்பிரமணியசாமி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
 
ஜீவசமாதி அமைந்துள்ள 41 சென்ட் நிலமானது பல்வேறு நபர்களிடமிருந்து விற்று, வாங்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு நாராயணன் என்பவர் கந்தசாமி என்பவரிடம் அந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். இந்த நிலையில் நாராயணன் அறக்கட்டளை நிர்வாகிகளை அணுகி அந்த இடத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதனடிப்படையில் அறக்கட்டளை சார்பில் பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சப்டிவிஷன் செய்து அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளனர். மேலும், நவம்பர் 2022ல் அதற்கான விண்ணப்பத்தையும் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது வரை தற்போது வரை அந்த இடமானது சப் டிவிஷன் செய்து தரப்படவில்லை. 
 
இதற்கிடையில் நாராயணன் மானாமதுரையைச் சேர்ந்த மற்றொரு அறக்கட்டளைக்கு மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இடத்தை கிரயம் செய்து கொடுப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த வந்த பாலசுப்பிரமணியசுவாமி அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சீடர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை பதிவு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அந்த இடத்தை நேரில் சென்று கள ஆய்வு செய்த பிறகு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.