வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (11:59 IST)

செந்தில் பாலாஜி உறவினர்கள் பண மோசடி : பணம் யாருக்கு சென்றது என விசாரிக்க உத்தரவு

’வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் யாருக்கு சென்றது என்பதை கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்களான அசோகன், கார்த்தி ஆகியோர் போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் பண மோசடி செய்ததாக, சென்னையைச் சேர்ந்த கோபி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் நேற்று புதனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்த போலீசார், இதே போன்ற புகாரை 81 பேர் அளித்துள்ளதாகவும், அதனடிப்படையில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
 
அதனைத் தொடர்ந்து, ‘இந்த வழக்கில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும்; மேலும், வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் யாருக்கு சென்றது என்பதை கண்டறிய மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தீவிர விசாரணை நடத்துவதுடன், அதனை துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.