1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (17:01 IST)

பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார் - செல்லூர் ராஜு !

என் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார் செல்லூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேட்டி. 

 
அமைச்சர் செல்லூர் ராஜு தனது கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களுடன் பெத்தானியாபுரம் பகுதியில் வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுத்தனர். அதோடு ஜல்லிக்கட்டு காளையுடன் மரியாதை கொடுத்தனர்.
 
அவர்களிடம் இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், உங்களில் ஒருவனாக உங்களுக்கு சேவை ஆற்றிட எனக்கு ஆதரவு தாரீர்  என்றார். 
 
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு வை வரவேற்கக் காத்திருந்த மக்களில் ஒரு பெண் தனது குழந்தையை கையில் வைத்திருந்தார் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சினார். அருகே இருந்த மூதாட்டியின் காலில் தொட்டு  வணங்கி தனக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு,
 
நான் போகிற இடத்திலெல்லாம் பெண்கள் முதியவர்கள் மூதாட்டிகள் இளைஞர்கள் என அனைவரும் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறதை நீங்களே பார்க்கிறீர்கள். உறவுக்கு தெரிந்த என்னை உலகறிய செய்தது இந்த மக்கள் தான் என்றார். பிஜேபி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு  வர வேண்டாம் என செல்லூர் ராஜூ முதல்வருக்கு கடிதம் எழுதியதாக எழுந்த குற்றச்சாட்டுக்குறித்த கேள்விக்கு, 
 
பிஜேபி மட்டுமல்ல எங்கள்  கூட்டணி கட்சி தோழர்கள்  ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். என்னுடன் ஓட்டு கேட்டு அனைத்து கூட்டணி கட்சி தோழர்களும் வருகிறார்கள். எங்கள் ஒற்றுமையின் மீது உள்ள பொறாமையால் அதை யாரோ சதி செய்கிறார்கள்.
 
முதலில்  நான் முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டியது இல்லை. போனில் பேசிக் கொள்ளலாம் அவர் யார் போன் அடித்தாலும் பேசுவார். எதனால் ஏன் கடிதம் எழுதனும் என்றார். உங்கள் மீதும் உங்கள் ஆதரவாளர்கள் மீதும் பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகார் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, 
 
அது முற்றிலும் தவறு சாதாரண கவுன்சிலராக இருந்து அவர் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுகிறார் அதனால் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் ஏதாவது பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் . என் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார் என்றார்.
 
அதோடு நான் சாதாரணமானவன் மக்களோடு மக்களாக இருந்து பழக கூடியவன் எனவே நானோ எனது என்னுடன் இருப்பவர்களோ யாரிடமும் எதற்கும் லஞ்சம் வாங்கியது கிடையாது என்றார். இந்த மேற்கு தொகுதியில் நான் மாபெரும் வெற்றி பெறுவேன் நான் சொல்வதை விட மக்களே சொல்கிறார்கள் என்றார்.