திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2017 (13:19 IST)

எனக்கு எதிராக எனது கணவரை சசிகலா தூண்டிவிடுகிறார்! - தீபா பரபரப்பு குற்றச்சாட்டு

என்னுடைய கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா கூறியுள்ளார்.


 

இது குறித்து தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைந்திட எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினேன். எதிரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் ஜெயலலிதா போல் துணிச்சலாக இன்று வரை செயல்பட்டு வந்தேன். இறுதியாக என்னுடைய கணவர் மாதவனை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்தி தனிக்கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளார்கள்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று என்னால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை அழித்துவிட வேண்டும் என சசிகலா குடும்பம் எனக்கு தொடர்ந்து பல இன்னல்களை அளித்து வந்தார்கள். அதையெல்லாம் கடந்து என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்தால் என்னுடைய குடும்பத்தை பிரித்துவிட வேண்டும் என்ற கொடிய செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அவரையே எனக்கு போட்டியாக ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு முன்னதாகவே எனது சகோதரர் தீபக்கையும் விலைக்கு வாங்கி எனக்கு எதிராக செயல்பட வைத்தார்கள்.

என் குடும்பத்தை பிரித்து என்னை தனிமைப்படுத்தினால் நான் அரசியலில் போட்டியிடுவது சிரமமாகும் என்பது சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனின் தவறான வியூகம். இதற்கெல்லாம் பயந்து நான் ஓட வேண்டும் என்றால் மக்கள் பணி ஆற்ற முடியாது.

யார் எதிர்த்து நின்றாலும் நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது என்பது உறுதி. சொந்த குடும்பத்தை ஆரம்ப காலத்திலிருந்தே சதி செய்து பிரித்து குளிர்காயும் சசிகலா தொடர்ந்து இதேபோல பல ஆண்டுகளாக எனது தந்தையும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொந்த அண்ணனுமான ஜெயக்குமாரை பிரித்து வைத்தார்.

எங்கள் குடும்பத்தை போயஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் எனது ஒரே சகோதரரான தீபக்கையும் கையில் எடுத்து கொண்டு அவரையும் என்னையும் பிரித்தனர். இப்போது எனது கணவரை வைத்து குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று பின்னால் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

யாருடைய மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் அயராது என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர செய்வேன். எதிரிகள் எனக்கு எதிரான சதி திட்டத்திற்கெல்லாம் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.