முதல்வர் பதவிக்காக மோடியிடம் சரண்டர் ஆகும் சசிகலா?
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மத்திய அரசிடம் சரண்டர் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் அவரை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியிலும் அமர வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரின் கீழ் செயல்படும் புதிய அமைச்சரவை கூட தயாராகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா உரையாடி வருகிறார். இந்த கூட்டம் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. அதன் பின் ஜனவரி 12ம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கான தேதி குறித்து ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதாம். ஆனால் அங்கிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. சசிகலா முதல் அமைச்சர் பதவியில் அமர்வதில் மத்திய அரசுக்கு உடன்பாடில்லை எனவும், அதனால்தான் இன்னும் சாதகமான பதில் வரவில்லை எனவும் கூறப்பட்டது.
எனவே, மத்திய அரசின் ஆதரவின்றி, சசிகலா தமிழக முதல் அமைச்சர் ஆக முடியாது என்று தெரிந்து கொண்ட சசிகலா குடும்பத்தினர், தற்போது வேறு மாதிரி காய் நகர்த்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளன. அதாவது, மத்திய அரசின் சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான் அந்த திட்டமாம்.
நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ் ஆகியோர் மூலமாக டெல்லியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள சசிகலா குடும்பத்தினர், அங்கிருந்து சாதகமான பதில் வராததால் அதிர்ச்சி அடைந்தனராம். ஆகையால், மத்திய அரசின் உதய் திட்டம் மற்றும் நீட் திட்டம் உட்பட சில திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்துதான், உதய் திட்டத்தை ஆதரித்து அதில் கையெழுத்து இட மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஜனவரி 9ம் தேதி( இன்று) டெல்லிக்கு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், அடுத்து நீட் திட்டத்திற்கும் ஒரிரு வருடங்களில் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
இதுதான் சரியான நேரம் என தங்கள் திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒப்புதல் பெற மத்திய அரசும், முதல்வர் பதவியை ஏற்பதற்காக மத்திய அரசின் எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க சசிகலா தரப்பும் காய்கள் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆட்சியை பெறுவதற்காக, மத்திய அரசிடம் தமிழகத்தை அடகு வைக்க சசிகலா குடும்பத்தினர் துணிந்து விட்டது, தமிழகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.