அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது, சசிகலா தரப்பிற்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சசிகலா சிறைக்கு சென்று விட்ட நிலையில், துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவுடனேயே, அதிமுக கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தினகரன் திட்டமிட்டார். சசிகலாவின் உறவினர்கள் கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் தலையிட விடாமல் தடுத்தார். இது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து இளவரசி மகன் விவேக் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் மூலம் சசிகலாவிடம் புகார் கூறப்பட்டது.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட்டதும், அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்த போது சசிகலா பெயரை எங்கும் உச்சரிக்காமல் இருந்ததும், ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகாரில் சிக்கியதும், இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கியதும் சசிகலாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக அப்போதே செய்திகள் வெளிவந்தன.
அதன் பின், சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்த தினகரன், மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் 35 பேர் அவரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
அப்போதுதான் தன்னை சிறையில் சந்தித்த தினகரனிடம் 60 நாட்கள் அமைதியாக இருக்கும் படி சசிகலா கூறினார். ஆனால், தனது பலத்தை காட்டும் முயற்சியில் தினகரன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பேச்சாளர்கள் தொடர்ந்து அனைத்து கூட்டத்திலும் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
இந்த செய்தி சசிகலாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே, இப்படி ஆள் திரட்டும் வேலையில் தினகரன் தொடர்ந்து ஈடுபட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன். அவரையும் அவருக்கு ஆதரவாக பேசி வருபவர்களையும் கட்சியை விட்டே நீக்கிவிடுவேன் என தன்னை சந்திக்க வந்த அதிமுக பேச்சாளர் ஒருவரிடம் சமீபத்தில் சசிகலா எகிறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதற்கு பின்னரே பலர் தினகரனுக்கு துதிபாடுவதை குறைத்துக்கொண்டனர் எனத் தெரிகிறது.