சமூக ஊடகங்களில் தனிநபர் தாக்குதல்.. இதுவும் ஒரு தண்டனையே: சரத்குமார்
சமூக ஊடகங்கள் மூலம் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
சமூக ஊடகங்கள் என்பவை சமூக அவலங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். பல முக்கியத் தகவல்களை பகிர்வதாகவோ அல்லது மக்களை மகிழ்விக்கும் விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயார் செய்வதாகவோ அவர்களது பணி அமையலாம். ஆனால் தற்போது பலவகையிலும் சமூக ஊடகங்கள் எல்லை மீறுவதாகவே இருக்கிறது.
பிரபலங்களின் கருத்துக்களை விமர்சிப்பதற்குப் பதிலாக அவர்களைத் தனிநபர்
தாக்குதலுக்கு உள்ளாக்குவது, உருவக்கேலி செய்வது, அவர்களது சொந்த தனிப்பட்ட வாழ்வைக் கிளறி அருவெறுக்கத் தக்க வகையிலான தவறான விமர்சனங்களைப் பதிவு செய்வது என்று சமூக ஊடகப் போர்வையில் சிலர் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் பெரும்பாலும் உண்மை இருப்பதில்லை என்பதோடு, யாரது தனிப்பட்ட வாழ்விலும் தலையிட ஊடகங்களுக்கு உரிமை இல்லை என்பதே அடிப்படை சமூக நீதி.
அடுத்தவர் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் நபர்கள் இதுபோன்ற போன்ற சமூக ஊடகப் பதிவுகளை ஊக்குவித்து ஆதரவளித்து வருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களின் மனநிலை முதலில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும்.கையில் ஒரு ஊடகம் இருக்கிறது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று களமிறங்கி இருக்கும் நபர்கள் குற்றவாளிகளாகவே அடையாளம் காணப்பட வேண்டும்.
உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவித்தால் தண்டனை உண்டு என்பது போல, தனிப்பட்ட மனிதர்களை மனதளவில் தாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் தண்டனைக்குரியதே.
Edited by Mahendran