சென்னை விழாவில் கலந்து கொண்ட எஸ்.வி.சேகர்! போலீஸ் தேடுகிறதா? நாடகமாடுகிறதா?
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் என்பதும், இந்த வழக்கின் அடிப்படையில் அவரை ஏன் போலீசார் கைது செய்யவில்லை என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் எஸ்.வி.சேகரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீதான சட்டப்படியான நடவடிக்கை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்
ஆனால் தனிப்படைகள் எஸ்.வி.சேகரை ஒருபக்கம் தேடி கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்ட விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டார். இதே விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும், அவர்களுடன் எஸ்.வி.சேகர் மேடையில் சிரித்து பேசிக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் உண்மையிலேயே போலீசாரின் தனிப்படைகள் எஸ்.வி.சேகரை தேடுகிறதா? அல்லது தேடுவது போல் நாடகமாடுகிறதா? என்றும் சமூக வலைத்தள பயனளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.