1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (15:56 IST)

உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

உடனடியாக நெல்லை கொள்முதல் செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 
 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
 
தமிழக விவசாயிகள் பயிரிட்ட நெல்லை தமிழக அரசு முழுமையாக கொள்முதல் செய்திட வேண்டும். நாகை மாவட்டத்தில் உள்ள 103 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் கொண்டு சேர்த்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. மேலும் அங்கு பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.
 
எனவே நாகை மாவட்டத்தின் 103 நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் காலம் தாழ்த்தாமல் விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
 
ஏற்கனவே கடும் வறட்சி, உரத்தட்டுப்பாடு, பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்காதது, அறுவடை செய்யும் நேரத்தில் பெய்த திடீர் மழை ஆகிய காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கடன் சுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
 
எனவே விவசாயிகள் பயிர் செய்த நெல்லை கிடப்பில் போடாமல், காரணம் ஏதும் கூறாமல் உடனடியாக நெல்லை கொள்முதல் செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளின் நெல்லுக்கு போதிய விலை கொடுத்து அவர்கள் நலன் காத்திட வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.