கூவத்தூரில் செய்தியாளர்கள் சாலை மறியல் போராட்டம்
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், இதனை கண்டித்து செய்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
கூவத்தூரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்து மர்ம நபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர். செய்தியாளர்களுக்கு ஆதரவாக கூவத்தூர் மக்கள் மர்ம நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்த மர்ம நபர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர்.
கூவத்தூர் நட்சத்திர விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்த அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் முன்பே மர்ம நபர்கள் சிலர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் செல்லும் அனைவரையும் சோதனை மேற்கொண்டே பிறகே அனுமதித்து வருகின்றனர். செய்தியாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக உள்ளே நடப்பதை காட்சிப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
செய்தியாளர்களுக்கு அவ்வப்போது பேட்டியளித்து வரும் ஒரு சில எம்.எல்.ஏ.க்களும் 2 கி.மீ தூரம் வந்துதான் பேட்டி அளித்து வருகின்றனர். மேலும் இதனால் அப்பகுதி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் சசிகலா அலோசனை கூட்டம் முடித்து விட்டு வெளியே வர சிரமம் ஏற்பட்டுள்ளது.