திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (11:19 IST)

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.! படகுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்..!!

Fisherman Protest
தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடந்த நான்காம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்ததோடு, இரண்டு விசை படகுகளையும் பறிமுதல் செய்தது.
 
கைதான மீனவர்களில் 20 பேரை நேற்று முன்தினம் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. மீதமுள்ள மூன்று பேரில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மற்ற இருவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பு தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
 
இந்நிலையில் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 700 மேற்பட்ட விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 43 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை வசமுள்ள  நூற்றுக்கு மேற்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
Fisherman Boat
கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, இலங்கை அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து, மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 
இதனிடையே வருகின்ற 23, 24ம் தேதி நடைபெறவுள்ள கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.