ஜெயலலிதாவின் படங்களை உடனே அகற்றுங்கள் - ராமதாஸ்
அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்ற வேண்டும். தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தின் கீழ் அமர்ந்து அதிகாரிகள் பணியாற்றினால், அவர்களும் ஊழல்வாதிகள் என்ற எண்ணம் அலுவலகத்திற்கு வருபவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிடாதா? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே அரசு அலுவலகங்களில் இருந்து அவரது படங்கள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சாதாரண கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முதல் முதல்– அமைச்சர் அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் ஜெயலலிதா புகைப்படமே நடுநாயகமாக மாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்கள், பண்ணை பசுமைக் கடைகள், கூட்டுறவு வங்கிகள் போன்ற இடங்களிலும் ஜெயலலிதாவின் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அனைத்துத் திரையரங்குகளிலும் பல்வேறு தலைப்புகளில் ஜெயலலிதாவின் புகழ் பாடும் விளம்பரப் படங்கள் அரசு செலவில் ஒளிபரப்பப்படுகின்றன. தமிழக அரசின் முதன்மை இணையத்தளம் தவிர, தமிழகச் சட்டப்பேரவை இணையத்தளம் உள்ளிட்ட அனைத்துத் துறை இணையத் தளங்களிலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக புதிய அரசின் பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் முன்னிலையில் ஜெயலலிதா படத்தை மேடையில் வைத்து வணங்கி விட்டுத் தான் முதல்–அமைச்சராக பதவியேற்றார். அரசியல் சாசனப்படி உறுதியேற்கும் விழாவில், முதல்–அமைச்சராக பதவியேற்கும் ஒருவர் ஆளுநர் முன்னிலையில் வணங்குவது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தின் கீழ் அமர்ந்து அதிகாரிகள் பணியாற்றினால், அவர்களும் ஊழல்வாதிகள் என்ற எண்ணம் அலுவலகத்திற்கு வருபவர்கள் மத்தியில் ஏற்பட்டுவிடாதா?
அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் இன்னும் ஜெயலலிதாவின் பெயரும் படமும் நீடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ஓ.பன்னீர் செல்வம் என்ற தனி நபருக்கு வேண்டுமானால் ஜெயலலிதா இதய தெய்வமாக இருக்கலாம். இதற்காக அவரது சொந்த இல்லத்திலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ ஜெயலலிதாவின் படத்தை வைத்து வணங்கிக் கொள்ளலாம். அதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
அரசு அலுவலகங்கள் விடுமுறையில் இருப்பதால் தான் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே, அவரின் படத்தை அனைத்து அரசு அலுவகங்களிலும் மாட்டும் அளவுக்கு மின்னல் வேகத்தில் செயல்படும் அதிகாரிகள், இப்போது அரசு விடுமுறையால் தான் ஜெயலலிதா படத்தை அகற்ற முடியவில்லை என்று சொல்வதை அவர்களின் மனசாட்சியே நம்பாது. ஜெயலலிதாவின் படங்கள் திட்டமிட்டே தான் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அதிகாரிகளின் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழகத்தில் நடைபெறும் அத்துமீறல்களையும் சட்டமீறல்களையும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று ஆட்சியாளர்கள் நினைக்க வேண்டாம். தமிழக நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதால் தான், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தனியார் பள்ளிக்கூடங்களை மூடும் முடிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, அரசு அலுவலகங்களிலும், ஆவணங்களிலும் ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்றுவதுடன், அனைத்து சட்டங்களையும் மதித்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.