வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : ஞாயிறு, 12 ஏப்ரல் 2015 (13:45 IST)

20 தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் - ராமதாஸ்

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட 20 தமிழர்கள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமைக்கு ஆந்திர அரசிடமிருந்து இயற்கையான நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு தென்படவில்லை. கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான எந்த ஒரு முன்முயற்சியையும் தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உதரவிடக்கோரி குடியரசுத் தலைவரிடம் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
திருப்பதி வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்து இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை இந்த படுகொலைகளின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வருவதற்கான விசாரணையை நடத்த ஆந்திர அரசு முன்வரவில்லை. மற்ற காவல்துறை  கொலைகளைப் போலவே இந்த படுகொலைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதுபோன்ற எந்த விசாரணையிலும் காவல்துறைக்கு எதிராக தீர்ப்பு வந்ததில்லை என்பது நாடறிந்த உண்மையாகும். அதுமட்டுமின்றி 20 தமிழர்கள் படுகொலைகளை ஆந்திர காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தா ராவ் என்ற காவல்துறை துணைத் தலைவர் (DIG) நிலையிலுள்ள அதிகாரி தான் முன்னின்று நடத்தியுள்ளார். காவல்துறையின் மற்ற உயரதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உண்டு என்றும், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒப்புதலுடன் தான் இப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

அதிகார மட்டத்தின் உயரதிகாரிகள் தொடங்கி ஆட்சி மட்டத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் வரை  அனைவரும் சம்பந்தப்பட்ட இவ்வழக்கை அதிகார படிநிலையின் தொடக்கத்தில் உள்ள கோட்டாட்சியர்  விசாரித்து எந்த அளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியும்? என்பது மில்லியன் டாலர் வினா? ஆகும். பொதுவாக இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் அது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடப்படுவது தான் வழக்கம். ஆனால், இந்த வழக்கு சி.பி.ஐ.யிடமோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமோ ஒப்படைக்கப்படக் கூடாது என்பதில் ஆந்திர அரசு தெளிவாக உள்ளது. இதற்காக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில்  பொய்யான தகவல்களை கொடுத்து வழக்கை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இன்னொரு புறம் மத்திய அமைச்சர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றி, மத்திய அரசிடமிருந்து எந்த நெருக்கடியும்  வராமல் பார்த்துக் கொள்கிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம்  ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவே தொலைபேசியில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
திருப்பதி வனப்பகுதியில் நடந்தது திட்டமிடப்பட்ட படுகொலை என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆந்திராவிலுள்ள பல்வேறு மனித உரிமை மற்றும் சிவில் உரிமை  அமைப்புகளும் இது படுகொலை என்பதை உறுதி செய்துள்ளன. திருவண்ணாமலையில் இருந்து சித்தூருக்கு பேரூந்தில் சென்றவர்களை நகரி என்ற இடத்தில் ஆந்திரக் காவல்துறை பிடித்துச் சென்று படுகொலை செய்ததை காவல்துறையிடமிருந்து தப்பி வந்த சேகர் என்பவர் உறுதி செய்துள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழகத்தில் தொடங்கி தலைநகர் தில்லி வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட மறுக்கிறது. மத்திய அரசின் இப்போக்கு வேதனையளிக்கிறது.
 
இத்தகைய சூழலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தர தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாட்சியர் விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு தான் என்பதில் தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இத்தகைய சூழலில் தமிழக அரசு இரு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதலாவதாக, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்திலும், ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் தமிழக அரசு தன்னையும் வாதியாக இணைத்துக் கொண்டு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.
 
இரண்டாவதாக தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அழைத்துக் கொண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆந்திரப் படுகொலைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தோ அல்லது சி.பி.ஐ.யின் சிறப்பு விசாரணைக் குழு மூலமாகவோ விசாரணை நடத்த ஆணையிடும்படி கோர வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பணியாளர் நலத்துறை மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் 20 தமிழர் படுகொலையின் பின்னணியில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று தான் கருத வேண்டியிருக்கும் என அவர் கூறியுள்ளார்.