ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 1 மே 2017 (12:49 IST)

தினகரனுக்கு தொடரும் சிக்கல்: மேலும் 50 லட்சம் லஞ்சம் பணம் சிக்கியது!

தினகரனுக்கு தொடரும் சிக்கல்: மேலும் 50 லட்சம் லஞ்சம் பணம் சிக்கியது!

டெல்லியில் கைது செய்யப்பட்ட தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் கொடுக்க கொண்டு வரப்பட்ட பணம் என தெரியவந்துள்ளது. இதனால் போலீஸ் காவலில் உள்ள தினகரனுக்கு மேலும் சிக்கல் தொடர்கிறது.


 
 
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
 
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர். சென்னை, கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்ற விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
 
விறுவிறுப்பாக நகர்ந்து வந்த இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக டிடிவி தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாரால் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் இருந்து கிளம்பி டெல்லி வந்தபோது அவரை கைது செய்துள்ளனர்.
 
சென்னையிலிருந்து கொச்சி வழியாக 10 கோடி ரூபாயை நரேஷ் அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியை சேர்ந்த நரேஷுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே நேரடி தொடர்பு இருந்ததா என விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வருகின்றன.
 
இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்து வழக்கு நகர நகர டிடிவி தினகரனுக்கு எதிராக பிடி இறுகுவதாகவே தெரிகிறது. இந்நிலையில் தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் டெல்லி போசாரால் கைது செய்யப்பட்டிருப்பது தினகரனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஹவாலா ஏஜெண்ட் நரேஷிடமிருந்து 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நரேஷிடம் விசாரணை நடைபெற்ற ஆரம்பக்கட்டத்திலேயே இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷுக்கு லஞ்சப் பணமாக கொடுக்கக் கொண்டு வந்த பணம் இது எனவும் கூறப்படுகிறது. மேலும் தினகரனின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய டெல்லி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
 
தினகரனின் எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரனின் ஐந்து வங்கிக் கணக்குகளின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் அதிக பணப்பரிவர்த்தனையும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு தினகரனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.