ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (11:40 IST)

இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி தனியார்இயலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு

பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.
 
இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
 
இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 தொடங்கி மே 20-ம் தேதி வரை நடக்க உள்ளது.
 
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறமுடியும்.
 
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
 
விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.