அழுத்தி பிடிக்கும் காங்., பிடி கொடுக்காத திமுக!? – பிப்ரவரி 9ல் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில கட்சிகள், மத்திய எதிர்கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மிகப்பெரும் கனவோடு I.N.D.I.A கூட்டணியை அமைத்தது. ஆனால் மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், அரவிந்த கெஜ்ரிவால் என அடுத்தடுத்து கூட்டணியில் இருந்தோர் காங்கிரஸ் இல்லாமல் தனித்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்து வருவது காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் காங்கிரஸுக்கான ஆதரவு கூட்டணியில் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சியில் இல்லாதபோதே பெரும்பான்மை தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டியது. தற்போது திமுக ஆட்சியில் உள்ளதால் ஆதரவு முன்பை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுகவுடனான கூட்டணியில் சீட்டுகள் ஒதுக்குவது குறித்த விவாதம் நேற்று அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தலைமை சொல்லி அனுப்பிய இரண்டு இலக்கங்களில் சீட்டை கேட்டு பெறுவது என்ற நோக்குடன் டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்ஸ்வானிக், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி உடைந்துள்ளதை காட்டி திமுக தரப்பில் தொகுதிகள் ஒதுக்குவதில் கணிசமான அளவு குறைவாகவே டீல் பேசியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முந்தைய தேர்தலின் வெற்றிகள் மற்றும் நடப்பு தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் இதில் டெல்லி தலைமையிலிரிந்து யாரும் கலந்து கொள்ளாமல் மாநில நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டு ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K