வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (15:24 IST)

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் சாலையோர கடைகள் அகற்றம்.. என்ன காரணம்?

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலையோர கடைகள் இன்று நகராட்சி அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டன.

சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டப் பணிகள் பூந்தமல்லி டிரங்க் ரோடு பகுதியில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பேருந்து நிலையம் முன்புறத்தில், உள்புறத்தில் பல சிறு வியாபாரிகள் சாலையோரக் கடைகளை அமைத்து, பழம் மற்றும் பூ வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

மெட்ரோ ரயில் பணிகளுக்கு இந்த கடைகள் இடையூறாக இருப்பதால், நகராட்சி அதிகாரிகள் முற்பகுதியில் வியாபாரிகளுக்கு கடைகளை அகற்ற அறிவுரை வழங்கியிருந்தனர். இருப்பினும், பலர் தொடர்ந்து சாலையோர வியாபாரத்தை முன்னெடுத்தனர்.

இதையடுத்து, இன்று பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளை, 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அகற்றினர். இதனால் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி, மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் வியாபாரிகள் அமைதி அடைந்தனர்.

Edited by Siva